Thursday, October 31, 2019

#20

கூரான உன் கருவிழியை காணும் கணமே வாய் குழைகிறேன், ஆழப்பார்வையில் அடுத்த நொடி உறைகிறேன், உன் கள்ள சிரிப்பபோடு முளைக்கும் கன்னக் குழியில் தடுமாறுகிறேன், மாறிக்கொண்டே இருக்கும் முகமொழிகளை விரல் விட்டு எண்ணுகிறேன், உன் சம்பாஷனைகள் எனை ஈர்க்காதது போல் நடிக்கிறேன், எதார்தமாய் உன்னை பார்க்க முயன்று தோற்க்கிறேன்.
கேள் சகியே,
உன் அண்மையில் என் சமநிலையை சரிபாதி இழக்கிறேன்

Tuesday, August 20, 2019

#19

மென்மைக்குள் பகுபடா ஐந்திதழ் விரிந்த
பூக்களே அவள் வாடிக்கை.
ஒரு பூவை நடுவில் வைத்து
அதை சுற்றி சில வைப்பாள்,
நான்கு பூக்களை சதுரத்தின்
மூலைகளில் நிறுத்துவாள். இதுபோல்
ஆறேழு பூக்கோலங்கள் அவள் கைவசம்.
கருநீளம், இளம்பச்சை என நிறங்களும்
பூ இலக்கணத்திற்குள்  மெத்த பொருந்தாது.
வெகு சில நாட்களில் பதினாறு
புள்ளிகள் குறையாத சிக்கு கோலங்களில்
தலை காட்டுவாள். குளிர் நனைக்கும்
காரிருள் மீது இளஞ்சுடர் படரத்
துவங்கும் சிறு பொழுதில் பூமிக்கு
 பச்சை குத்தியதை போல்
அவள் கோலங்கள் விடியலின்
 நிறங்களை மெருகூட்டி கொண்டிருக்கும். 

Friday, June 28, 2019

#18

பகலில் தொடங்கி அன்றிரவை கடப்பதில்லை, இரவானால் யாமம் தாண்டுவதில்லை.
கோபமும், புரிதலும் ஒன்றையொன்று தலைதட்டி நிமிர்ந்தபடி ஒரு நாளைக்கூட முழுதாய் முடிக்க முடியாத நம் ஊடலுக்கு ஓர் காரணப்பெயர் தேடுகிறேன்

Wednesday, June 26, 2019

#17

உன் புகைப்படங்களை பார்க்கையில் சாலையோரக் கோயிலை கடக்கும் பக்தனாகிறேன், ஆள் காட்டி விரலை அனிச்சையாய் முத்தமிடுவதுபோல பட்டவர்த்தனமாய் சிரித்து வைக்கிறேன்

Wednesday, November 21, 2018

#16

 உன் கை விரல்களில் எதை பற்றுகிறேன் என்று கண்களை மூடிக்கொண்டே சரியாகச் சொல்வதாய் கூறியதெல்லாம் உண்மைதான். ஆனால், உன் பத்து விரலையும் காட்ட சொன்னதின் காரணம் வேறு. என் முயற்ச்சியே  தவறான பதிலுக்குரிய நிகழ்தகவை அதிகப்படுத்துவதுதான். உன்னை தோற்கடிப்பதை விட உன்னிடம் தோற்ப்பதில் ஓர் அலாதிப்பிரியம்.

Friday, November 9, 2018

#15

கதைகளை சாராது,கருப்பொருள் இல்லாது,
 பழையவை தொடராது, புதியவை தீராது,
பிம்பங்கள் கிடையாது, வரையறைக்குள் பொருந்தாது,
இது போலும் அல்லாது , அது போலும் நிகழாது
வெற்று பேச்சுகளில், மௌனப் பார்வையில், பரஸ்பர பிரிவில், பிரிவின் குமைவில்,
பிறிதொரு நினைவில் இப்படித்தான் காதல் என்று
நமக்கானதோர் வழியில் நீயும் நானும் கோடு
போட்டு கொள்ளலாம், கேட்பார் எவருமில்லை 

Sunday, October 21, 2018

#14

பொன்குழல் இளவரசி ரபுன்சல், பாரதி 
குறிக்கும் கண்ணம்மா, காவியங்களின் 
நாயகிகள், ஸ்பானிய பேதைகள் சிலரது, 
அத்தனை பெயர்களிலும். இத்யாதிப் பெயர்கள் பிரத்யேகமாய் நான் எழுதியவற்றிலும். 
இயன்றளவு என் கண்ணில் அழகெனத் தெறியும் அனைத்திலும் உன் சாயலைக் கொணர்கிறேன். 

Saturday, October 20, 2018

#13

நான் பார்க்க தோதான இருக்கையில்  நீ,
உனக்காக காத்திருந்து ஏறும் நான்.
விழியோடு விழி நோக்கும் தற்செயலான 
தருணங்களும் நீட்சியாய் விரியும் 
குறுஞ் சிரிப்பும், நாம் திட்டமிட்டு 
பேருந்தில் நடத்தும் இவை யாவும்
நிகழ்வுப் பொருத்தம் என பரஸ்பரமாய் 
செய்தி அனுப்ப மெனக்கெடுவது தான்  காதலென்றால் இந்த காதல்
நீர்த்திடாமல் நீள வேண்டும்.

Friday, October 19, 2018

#12

வெள்ளைத்துணி போர்த்திய மார்கழியில் குளிர், வெயில் சங்கமிக்கும் ஓர் விடியலை பிடித்து நம் காதல் கதைகளால் அலங்காரிப்போம்  வா 

#என்_ஆசைகள்_கேளேன் 


Thursday, October 18, 2018

#11

கோபம் தீர திட்டலாம், மணிக்கணக்கில்
சண்டை போடலாம், பெருந்தன்மையாய் மன்னிக்கலாம் இவ்வளவு இருந்தும் நீ 
ஏன் திணறடிக்கும் கள்ள மெளனத்தை கையில் 
எடுக்கிறாய்

Wednesday, October 17, 2018

#10

என் சிந்தையில் தொக்கி நிற்கும் நம் கடைசி சந்திப்பின் முனுமுனுப்புகள் அந்த ஆர்கலியின் பேரிரைச்சலையும் சரித்து என் செவி சுற்றுகிறது

Tuesday, October 16, 2018

#9

உச்சந்தலை விழும் முதல் துளியின் கிளர்ச்சி அடைமழையிலும் கிடைப்பதில்லை. உன்னால் சுரந்த காதலும் என் உச்சி நனைத்த முதல் துளியடி. 

#8

அலட்சியமாய் அரிதாரம் பூசிய உன் அக்கறையே என் முதல் எதிர்பார்ப்பு. கொஞ்சலும், கோபமும் அதற்கடுத்த மையல்கள்

Monday, October 15, 2018

#7

வைகறையில் எழுந்து, உறங்கும் 
உன் முகம் பார்த்துவிடுவதில்
தொடங்க வேண்டும்  அன்றைய பொழுது

#என்_ஆசைகள்_கேளேன்

Friday, October 12, 2018

#6

என்னளவில் 
உன் விழியோர மையிடுவேன் 
கார்குழல் கோதி தலை பின்னுவேன் 
 உன் காதோரம் கதைகள் சொல்லுவேன்

உன்னளவில்  
என்னை  காதல் செய் போதும் 

#5

திங்களின் இருளாய் உன் மடி தரும் கிறக்கத்தை தலையணையில் தேடிக்கொண்டிருக்கிறேன். 

Thursday, October 11, 2018

#4

அடவி மலை அலைந்தும், புனல் அழுந்தி தவம் புரிந்தும் என் சிரமேறிய உன் நினைவை துடைக்கும் வழி கண்டிலன். 

Monday, October 8, 2018

#3

கடந்த சந்திப்பின் சிலாகிப்புகளும் அடுத்த சந்திப்பின் தயாரிப்புகளும் என்னை சுழல வைக்கும் கயிறு 

#2

 என் தோல் பதித்த உன் உள்ளங்கை தடங்கள் இன்னும் என் நினைவில் அழியாமல் வண்ணமாய்

Wednesday, September 12, 2018

#1

அற்பமாய் தள்ளவும் முடியாமல், அதன் அர்த்தமும் விளங்காமல் ஓர் ஆசை நெருடுதடி. இக்கணம் உன் இறக்குழல் துவட்ட தோன்றுதடி.

#என்_ஆசைகள்_கேளேன்